வேறு ஒருவரை திருமணம் செய்ததால் ஆத்திரம் வீடு புகுந்து காதலியை தாக்கி விட்டு தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை குடிபண்டே அருகே பரபரப்பு


கோலார் தங்கவயல், தன்னை காதலித்து விட்டு வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டதால் காதலியை வீடு புகுந்து தாக்கி விட்டு, அங்கேயே தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். குடிபண்டே அருகே நடந்த இந்த பரபரப்பான சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:– தனியார் நிறுவன ஊழியர் சிக்கபள்ளாப்பூர் மாவட்டம் குடிபண்டே தாலுகா மோடமாக்கனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணா (வயது 26). பட்டதாரி. இவர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவரும், அதே கிராமத்தை சேர்ந்த கவிதா (வயது 21, பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரும் காதலித்து வந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கவிதாவிற்கு அவரது பெற்றோர் இன்னொருவருடன் திருமணம் செய்து வைத்தனர். இதையடுத்து, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கவிதா தனது பெற்றோர் வீட்டிற்கு வந்தார். அப்போது அவரிடம் ராமகிருஷ்ணா பேச முயன்றார். ஆனால் ராமகிருஷ்ணாவிடம், கவிதா பேச மறுத்ததோடு, தனது செருப்பால் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும், கவிதாவின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். அந்த புகாரை தொடர்ந்து போலீசார், ராமகிருஷ்ணாவை அழைத்து எச்சரித்து அனுப்பினார்கள். தற்கொலை இந்த நிலையில், நேற்று முன்தினம் கவிதா மீண்டும் மோடமாக்கனஹள்ளி கிராமத்திற்கு வந்தார். அவர் வீட்டில் தனியாக இருந்தபோது, ராமகிருஷ்ணா அங்கு சென்று கவிதாவிடம் பேச முயன்றார். ஆனால் கவிதா, ராமகிருஷ்ணாவிடம் பேசாமல் கூச்சலிட்டார். இதனால் ஆத்திரமடைந்த ராமகிருஷ்ணா வீட்டில் இருந்த கட்டையை எடுத்து கவிதாவின் தலையில் ஓங்கி அடித்ததாக கூறப்படுகிறது. இதில், அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். பின்னர் கவிதா இறந்ததாக கருதி அவரது வீட்டிலேயே ராமகிருஷ்ணா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில், கவிதாவின் வீட்டிற்கு அவரது பெற்றோர் வந்தனர். அவர்கள் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த கவிதாவை மீட்டு குடிபண்டே அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீஸ் விசாரணை இதுபற்றிய தகவல் அறிந்ததும், குடிபண்டே டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் அவர்கள் ராமகிருஷ்ணாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடிபண்டே அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து குடிபண்டே டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தன்னை காதலித்த விட்டு வேறு ஒருவரை திருமணம் செய்த காதலியை தாக்கி விட்டு அவரது வீட்டிலேயே தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மோடமாக்கனஹள்ளி கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

0 comments:

கருத்துரையிடுக

+