தீவிரவாதிகள் தாக்குதலில் 19 பேர் உயிரிழப்பு, தீவிரவாதிகளுக்கு எதிராக போர் துனிசியா அதிபர் சபதம்
துனிஸ்,
துனிசியாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 19 பேர் உயிரிழந்தனர். தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் கருணையின்றி நடைபெறும் என்று அந்நாட்டு அதிபர் சபதம் செய்து உள்ளார்.
ஆப்பிரிக்க நாடான துனிசியாவின் தலைநகர் துனிஸ் சுற்றுலா தலம் ஆகும். அங்கு பாராளுமன்றத்தையட்டி, பார்டோ தேசிய அருங்காட்சியகம் உள்ளது. அந்த அருங்காட்சியகத்தை நேற்று இந்திய நேரப்படி பிற்பகல் 4.30 மணிக்கு 100-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கே ராணுவ உடை அணிந்த தீவிரவாதிகள் 3 பேர் நுழைந்தனர். அங்கிருந்தவர்களை அவர்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினார்கள். இதனால் அங்கிருந்தவர்கள் பதற்றத்தில் உயிர் பிழைப்பதற்காக நாலாபக்கமும் ஓட்டம் பிடித்தனர்.
இந்த தாக்குதலில் 19 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 17 பேர் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், ஒருவர் உள்நாட்டு சுற்றுலாப்பயணி என தெரியவந்துள்ளது. ஒருவர் பாதுகாப்பு படையை சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஜப்பான், கொலம்பியா, இத்தாலி, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், போலந்து மற்றும் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டு உள்ளனர். தாக்குதலில் 40 பேர் காயம் அடைந்து உள்ளனர். காயம் அடைந்தவர்கள் அங்குள்ள மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 10 சுற்றுலாப் பயணிகளை பணயக் கைதிகளாக தீவிரவாதிகள் பிடித்து வைத்திருந்ததாகவும் சொல்லப்படுகிறது.
தீவிரவாதிகள் தாக்குதல் குறித்து தகவல் அறிந்ததும் பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து சென்று சுற்றி வளைத்தனர். தீவிரவாதிகள் தாக்குதலையடுத்து பாராளுமன்றத்தில் இருந்து உடனடியாக எம்.பி.க்கள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இரண்டு தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். இன்னும் துனிசியாவில் 3 தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது. அவர்களை சுட்டு வீழ்த்தும் பணியில் ராணுவம் இறங்கி உள்ளது. இதற்கிடையே தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் கருணையின்றி நடைபெறும் என்று அந்நாட்டு அதிபர் பெஜி கெய்ட் சபதமிட்டுள்ளார். தீவிரவாதிகளை ஒழித்துக்கட்டும் வரையில் தீவிரவாதிகளுக்கு எதிரான போரை ராணுவம் தொடரும் என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்.
லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தை தலைமை தாங்கி நடத்திய அகமது அல் ரூயிஸி, லிபிய படையினருடன் நடந்த மோதலில் கொல்லப்பட்ட சில நாட்களில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. எனவே இந்த தாக்குதலை ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்தி இருக்கக்கூடும் என்ற யூகம் எழுந்துள்ளது. தீவிரவாதிகள் தாக்குதலால் துனிசியாவில் சுற்றுலா பயணிகள் வரத்து குறைந்து விடும் என்று கூறப்படுகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது