அகலக்கால்... அபாயம்! சறுக்கலை சரிசெய்த சவாலான நிதித் திட்டமிடல்

கஷ்டம் வரும்போதுதான் கடவுள் ஞாபகம் வரும். இப்போது சிலருக்கு கடவுளோடு நிதி ஆலோசகர்களின் ஞாபகமும் வருகிறது. கணேஷ், சுதா தம்பதிகள் ஏறக்குறைய அந்த மாதிரியான ஒரு தம்பதிதான். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கணேஷ்(40), சுதா(36) இருவரும் என்னைச் சந்தித்தபோது இருவருமே பணியில் இருந்தார்கள். சுதாவுக்கு அரசு நிதித் துறையில் வேலை. அவர் வாங்கிய சம்பளம் பிடித்தம்போக ரூ.40,000. கணேஷ§க்கு தனியார் துறையில் விற்பனைப் பிரிவில் வேலை. அவர் வாங்கிய சம்பளம் ரூ.45,000. இவர்களுக்கு அபர்ணா (12 வயது), அர்ஜுன் (10 வயது) என இரண்டு குழந்தைகள்.
தவறான அணுகுமுறை!
இருவரும் இரண்டு ஃப்ளாட்களை வாங்கி முதலீடு செய்ததைப் பெருமையாக என்னிடம் சொன்னார்கள். முதல் ஃப்ளாட்டுக்கு ரூ.25 ஆயிரம் இ.எம்.ஐ. கட்டி வந்தார்கள். வீடு வாங்கும்போது விலை ரூ.25 லட்சம். அதன்  தற்போதைய மதிப்பு ரூ.40 லட்சத்திற்கும் மேல். இந்த விஷயம்தான் அவர்களைப் பெருமை கொள்ள வைத்திருப்பதற்கான காரணம் என்று எனக்கும் விளங்கியது.
முதல் முதலீடு வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து இரண்டாவதாக இன்னொரு ஃப்ளாட்டை வாங்கினார்கள். அதற்கான இ.எம்.ஐ. மாதத்திற்கு ரூ.20,000. மேலும், பில்டருக்கு முன்பணமாகத் தர ரூ.3 லட்சத்தைக் கடன் வாங்கி இருந்தார்கள். அதற்கு அவர்கள் கட்டிவந்த இ.எம்.ஐ. ரூ.15,000. ஆக மொத்தம் அவர்களின் மாத வருமானத்தில் பெரும் பங்கு வீட்டுக் கடனுக்காக இ.எம்.ஐ. செலுத்துவதிலேயே செலவானது. இதனோடு அவர்களின் குடும்பச் செலவு ஒரு மாதத்திற்கு ரூ.20,000. மற்ற செலவுகள்போக, மேற்கொண்டு முதலீடு செய்வதற்கு அவர்கள் கையில் பணமில்லை.
இந்த நிலையில், அடுத்த ஒரு வருடத்தில் இன்னுமொரு ஃப்ளாட்டை வாங்கப் போவதாகச் சொன்னார்கள். ஏன் இப்படி அடுத்தடுத்து ஃப்ளாட்களை வாங்குகிறீர்கள் என்று கேட்டேன். பிற்பாடு குழந்தைகளின் திருமணத்தின்போது ஃப்ளாட்டை விற்று, செலவைச் சமாளிக்கவே இப்படி செய்வதாகச் சொன்னார்கள். அகலக்கால் எப்போதும் அபாயத்தையே விளைவிக்கும். அத்தியாவசியத் தேவைக்கு ஒரு ஃப்ளாட் போதும். குழந்தைகளின் படிப்பு, திருமணம், ஓய்வூதியம் போன்றவற்றுக்கு ரியல் எஸ்டேட் முதலீட்டை மட்டுமே நம்பி இருக்க வேண்டாம் என்று நான் அவர்களிடம் சொன்னேன். மூன்றாவது ஃப்ளாட்டை வாங்கும் எண்ணத்தை சில ஆண்டு தள்ளி வையுங்கள் என்றேன். இதனால், கடன் சுமை அதிகரிப்பதைத் தடுக்கலாம். தவிர, மாத பட்ஜெட்டில் ரூ.19,000-20,000 துண்டுவிழும் என்பதை எடுத்துச் சொன்னேன்.
இன்ஷூரன்ஸ் இல்லை!
முதலீட்டில் மட்டும் இத்தனை அக்கறை யோடு இருந்தவர்கள், போதிய அளவு ஆயுள் காப்பீடு எதுவும் இல்லாமல் இருந்தது ஆச்சர்யமான விஷயம். கணேஷ், சுதா இருவருக்கும் குறைந்தபட்சம் தலா ரூ.40-50 லட்சம் பியூர் டேர்ம் இன்ஷூரன்ஸ் தேவை என்று வலியுறுத்தினேன்.
எதிர்காலத் தேவை!
முதல் குழந்தைக்கான படிப்புக்கு அடுத்த சில வருடங்களில் ரூ.8 லட்சம் வரை தேவை.  இதைச் செய்யும்முன், இரண்டாவது வீடு வாங்க அவர்கள் எடுத்திருந்த பெர்சனல் லோனை முதலில் முடிக்கவேண்டும். காரணம், இதற்கு வட்டி அதிகம்.
நான் சொன்ன யோசனைகளை கேட்டபிறகு, மீண்டும் என்னை சந்திப்பதாகச் சொல்லிவிட்டுப் போனவர்கள், போனவர்கள்தான். நீண்ட காலம் அவர்களிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை.
கிட்டத்தட்ட 9 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் வந்து என்னை சந்தித்தார்கள். அவர்கள் முகத்தில் பழையபடி கவலை ரேகை. ''சார், நீங்கள் சொன்னதைக் கேட்காமல் மூன்றாவது ஃப்ளாட்டை கையில் இருந்த நகைகளை அடமானம் வைத்தும், கடன் வாங்கியும் வாங்கிவிட்டோம். வீடு கட்டி முடிக்க தாமதமாகிறது. நீங்கள் சொன்னது போல் மாதம் 20,000 ரூபாய் துண்டுவிழுகிறது. நாங்கள் எதிர்பார்த்ததுபோல் வருமான உயர்வும் கிட்டவில்லை. என்ன செய்யலாம்?'' என்று கேட்டார்கள்.
எனக்கு இது புதிதல்ல. நிதி ஆலோசனைக் கேட்டு வருகிற பலரும் நான் சொல்வதைக் கேட்டு தலையைத் தலையை ஆட்டுவார்கள். பிறகு அதை அப்படியே விட்டுவிடுவார்கள். நிதி ஆலோசனை என்பது விளையாட்டுத்தனமான விஷயமல்ல. அது ஒருவரின் வாழ்க்கையை சீர்திருத்தி அமைக்கும் செயல்.
இது எனக்குத் தெரியும் என்பதால், அவர்கள் செய்த தவறை பெரிதுபடுத்தாமல், ஒரு நண்பர் போல மீண்டும் ஆலோசனைகளைத் தரத் தொடங்கினேன். தற்போதைய நிலையில் பணப்புழக்கத்திற்கு வழியே இல்லாததால், ஏதேனும் ஒரு வீட்டை விற்று, வரும் பணத்தைக் கொண்டு பெர்சனல் லோன், கோல்டு லோன்களை முதலில் அடைத்துவிட்டு வருமாறு சொன்னேன். மேலும், வருமான வரிச் சலுகைகளையும் பெற ஆலோசனை கூறினேன்.
குழந்தைகளின் படிப்பு!
இரண்டு வாரங்களுக்குப் பிறகு எனக்கு போன் செய்த கணேஷ், வீட்டை விலை பேசி முடித்துவிட்டதாகச் சொன்னார். நான் முன்னரே அவர்களுக்கு திட்டமிட்டதுபோல், குழந்தைகளின் படிப்பு, திருமணம் மற்றும் ஓய்வுக்கான சேமிப்புகளைத் தொடங்கினார்கள்.  ஆனால், அதற்கான பணம் அவர்களிடம் அதிகமில்லை.
கைதந்த டியூஷன்!
சேமிப்புக்கு என்று மீதி நிற்கும் தொகையே 1,000 ரூபாய்தான். அதனால் அவர்களுக்கு எக்ஸ்ட்ரா வருமானம் தேவை. அவர்கள் எதிர்பார்த்த சம்பள உயர்வு கிடைத் திருந்தால் இந்நிலைமையை ஓரளவுக்கு சரி செய்திருக்கலாம். வரவில்லை என்பதால் எக்ஸ்ட்ரா வருமானத்தை ஈட்ட இருவரையும் பகுதி நேரமாக பிள்ளைகளுக்கு டியூஷன் எடுத்து சம்பாதிக்கச் சொன்னேன்.
முதல் இரண்டு மாதங்கள் பெரிய வருமான மில்லை என்றாலும் அடுத்து வேகமெடுத்தது. அதனால் மாதம் ஒன்றுக்கு 15,000 ரூபாய் சம்பாதித்தார்கள். அந்தப் பணத்தை வேறெதுக்கும் பயன்படுத்தாமல் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணத்திற்காக, அவர்களின் ஓய்வுக்காலத்திற்காகப் பிரித்து மியூச்சுவல் ஃபண்ட், பேலன்ஸ்டு ஃபண்ட் மற்றும் ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்யச் சொல்லி நல்ல வருமானம் தரும் மியூச்சுவல் ஃபண்டுகளையும் பரிந்துரை செய்தேன். இதை அவர்கள் செய்தால் எதிர்காலம் குறித்து கவலை இல்லாமல் இருக்கலாம். அவர்கள் செய்வார்கள் என்கிற நம்பிக்கை எனக்கிருக்கிறது!''
தொகுப்பு: செ.கார்த்திகேயன்.
குறிப்பு: இந்தக் கட்டுரையில் வரும் குடும்ப நபர்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன

0 comments:

கருத்துரையிடுக

+