முனிவரை சிந்திக்க வைத்த இளைஞன் !

தமிழ் செய்திகள்   முக்கிய தகவல்கள்  நாட்டு . நடப்பு  உலக செய்திகள் ...
undefined முனிவர் ஒருவர், நடுக்காட்டில் ஆசிரமம் அமைத்து தவ வாழ்க்கை மேற்கொண்டு வந்தார். அவர் மக்கள் அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்ற நல்ல எண்ணம் கொண்டவராக இருந்தார். கடும் தவத்தின் காரணமாக சில சித்து விளையாட்டுக்கள் அவருக்கு தெரிந்திருந்தது. அதன் காரணமாக அவரது புகழ் நாடு முழுவதும் பரவியது. இதையடுத்து முனிவரைப் பார்ப்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் வந்து சென்ற வண்ணம் இருந்தனர். மக்களின் புகழ்ச்சியானது, முனிவர் மீது படத் தொடங்கியதும், அவருக்கு தன்னைப் பற்றிய கர்வமும் சற்று தலை தூக்கிவிட்டது. இந்த நிலையில் முனிவரைப் பார்ப்பதற்காக இளைஞன் ஒருவர் வந்திருந்தான். முனிவரை வணங்கிய அவன் பின்பு அவரிடம் பேசத் தொடங்கினான். ‘சுவாமி! உங்கள் சக்தி பற்றி கேள்விபட்டே நான் வந்திருக்கிறேன்’ என்றான். அவனது இந்த சொல் முனிவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. தொடர்ந்து அவனிடம் பல மணி நேரம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது யானை ஒன்று அந்த ஆசிரமத்தின் பக்கமாக வந்தது. அதைக் கண்ட இளைஞன், ‘சுவாமி! தங்களால் அந்த பலம் பொருந்திய யானையை கொல்ல முடியுமா?’ என்று கேட்டான். ‘இதெல்லாம் எனக்கு பெரிய காரியமே அல்ல. இப்போது பார்’ என்று கூறிய முனிவர், தன்னுடைய கமண்டலத்தில் இருந்து கொஞ்சம் தண்ணீரை எடுத்து மந்திரத்தை ஜெபித்து அந்த யானை இருந்த திசை நோக்கி வீசினார். அவ்வளவுதான். என்ன ஆச்சரியம். அந்த யானை அடுத்த வினாடியே சுருண்டு விழுந்து இறந்தது. இதை ஆச்சரியத்துடன் பார்த்த இளைஞன் மீண்டும் முனிவரிடம் திரும்பி, ‘சுவாமி! உங்கள் மந்திர சக்தியைக் கண்டு பிரமித்து போய் விட்டேன்’ என்றான். முனிவருக்கு பெருமை பிடிபடவில்லை. கர்வத்துடன் அதை ஆமோதித்தார். பின்னர் அந்த இளைஞன், ‘சுவாமி! இப்போது இறந்து கிடக்கும் யானையை உங்களால், மீண்டும் உயிர் பிழைக்க வைக்க முடியுமா?’ என்று கேட்டான். ‘என்னால் முடியாதது என்று எதுவும் இல்லை. நீ இப்போது கூறியதையும் கூட என்னால் செய்ய முடியும். இதோ பார்’ என்று கூறிய முனிவர், மீண்டும் கமண்டலத்தில் இருந்து கொஞ்சம் தண்ணீரை எடுத்து இறைவனை ஜெபித்து யானை மேல் தெளித்தார். அடுத்த வினாடியே யானை உயிர்ப்பெற்று, அங்கிருந்து ஓடி காட்டிற்குள் மறைந்தது. இப்போது இளைஞன், அந்த முனிவரைப் பார்த்து ஒரு கேள்வியைக் கேட்டான். ‘சுவாமி! நீங்கள் முதலில் யானையைக் கொன்றீர்கள். பின்னர் அதைப் பிழைக்க வைத்தீர்கள். இதனால் நீங்கள் பெற்ற பலன் என்ன?. இதனால் என்ன ஆன்மிக வளர்ச்சியை அடைந்தீர்கள்? நீங்கள் இப்போது செய்த சித்து விளையாட்டு, கடவுளை நீங்கள் எளிதாகக் காண உங்களுக்கு உதவி புரியுமா?. அது மட்டுமில்லாமல், இறைவனின் அருளைப் பெற்ற ஒருவன், விலை மதிப்பில்லாத ஞானம், வைராக்கியம், பக்தி போன்றவற்றை விட்டுவிட்டு சித்துக்களைச் செய்யத் தொடங்குவது தவறு இல்லையா? இந்த மந்திர தந்திரங்கள் எல்லாம் இறைவனுக்குப் பிடிக்குமா?. மேலும் கடவுளை அடைவதற்கு இந்த சித்து விளையாட்டுக்கள் தடை அல்லவா?’ என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டே சென்றான். இவ்வளவு பெரிய விஷயத்தை எளிதாக, தன் புத்தியில் உரைக்கும்படி எடுத்துக் கூறிய அந்த இளைஞனை, முனிவர் ஏறிட்டுப் பார்த்தார். அவர் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, அந்த இளைஞர் அங்கிருந்து மாயமாய் மறைந்து போனான். ஆம்! இளைஞனாய் வந்தவர் இறைவன் தான். கண்ணீருடன் இறைவனை கையெடுத்துக் கும்பிட்ட முனிவர், அன்று முதல் தன்னுடைய சித்து வேலைகளை விட்டு விட்டு, தன் முழு கவனத்தையும் இறைவனின் மீதும், ஆன்மிக பணிகளின் மீதும் செலுத்தத் தொடங்கினார்

0 comments:

கருத்துரையிடுக

+