கடனே வாங்கக் கூடாதா?

சிலர், 'நான் எப்பவும், யார்கிட்டயும் கைநீட்டிக் கடன் வாங்க மாட்டேன்'என்று பெருமையாகக் கூறுவார்கள். பாராட்டுக்குரிய விஷயம்தான். ஆனால் எந்தக் கடனுமே வாங்கக் கூடாது என்று முரட்டுத்தன பிடிவாதமாக இருப்பது சரியா என்பது பரிசீலனைக்குரியது.

'வரவுக்குள் செலவை அடக்கிக்கொள்ள வேண்டும்'என்பதை மட்டும் உடும்புப் பிடியாய் பிடித்துக் கொண்டு, நமது முன்னேற்றத்துக்கான கடன்களைக் கூட ஒதுக்குவது புத்திசாலித்தனமல்ல.

உதாரணமாய், வீட்டுக் கடன், வீட்டு மனைக் கடன், கல்விக் கடன் போன்றவற்றைச் சொல்லலாம். இன்றைய நிலையில், வீடு கட்டத் தேவையான பணத்தையெல்லாம் சம்பாதித்துச் சேர்த்தபின் அந்த வேலையைத் தொடங்குவேன் என்று கூறினால் கேட்பவர்கள் நகைப்பார்கள்.

அப்படியே நீங்கள் வீட்டு மனை வாங்குவது, வீடு கட்டுவதற்கான பணத்தை சேமித்துச் சேர்ப்பதாக வைத்துக்கொண்டாலும், சேமித்து தயாராவதற்குள் விலையெல்லாம் எங்கோ போயிருக்கும். ஆக, இன்றைய சூழலில் இது சாத்தியமில்லை என்றே கூறிவிடலாம்.

வீட்டுக் கடனுக்கு நீங்கள் செலுத்தும் மாதாந்திர தவணைத் தொகை, சில வருடங்களில் அப்போதுள்ள வாடகை நிலைக்குச் சமமாக வந்திருக்கும். எனவே சொந்த வீட்டுக்கு வாடகை செலுத்துவது போல அதைச் செலுத்திக் கொண்டிருக்க வேண்டியதுதான்.

விரைவாக வளர்ந்து வரும் பகுதியில் ஒரு மனை விலைக்கு வருகிறது. எதிர்காலத்தில் வீடு கட்டவோ, வர்த்தகரீதியாகப் பயன்படுத்தவோ அது வசதியாக இருக்கும் என்றாலும் யோசிக்காமல் மனைக் கடன் மூலம் அதை வாங்கிவிடலாம்.

மாறாக, 'ஆசைப்பட்டு என்ன செய்ய? கையில் காசில்லையே... கடன் கிடன் என்று போய் எதிர்காலத்தில் யார் அவதிப்படுவது?'என்று தத்துவம் பேசிக்கொண்டிருந்தால் பின்னர் இழப்பு உங்களுக்குத்தான்.

'அப்போ அடிமாட்டு விலைக்கு அந்த இடம் வந்தது. நான்தான் வாங்க வேண்டுமா என்று யோசித்தேன். அப்போது அங்கே இங்கே பணத்தைப் புரட்டி அந்த இடத்தை வாங்கிய சுந்தரம் இன்று அந்த இடத்துக்கு கோடிகளில் விலை பேசுகிறான்'என்று பலரும் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டிருக்கலாம்.

சம்பாதிக்கும் இளைஞர்கள், வீட்டுக் கடன், மனைக்கடன் போன்ற ஆக்கபூர்வமான கடன்களை சீக்கிரமே பெறுவது நல்லது. கல்யாணமாகாத நிலையில், இளைஞர் களுக்கு நிதி சார்ந்த பொறுப்புகள் குறைவாக இருக்கும். அப்போது கையில் அதிக பணப்புழக்கம் இருந்தால் வீண் செலவுகள், தேவையற்ற பழக்கங்கள் என்று பணம் கரைவதற்கு வாய்ப்பு அதிகம்.

ஒரு கடனுக்கான மாதாந்திரத் தவணை என்ற கட்டாயம் ஏற்படும்போது மேற்கண்ட விஷயங்கள் தவிர்க்கப்படும். திருமணமாகும்போது சொந்த வீடு அல்லது குறைந்தபட்சம் வீடு கட்டுவதற்கு சொந்தமாக ஒரு மனை இருப்பது எவ்வளவு சந்தோஷமாக இருக்கும் என்பதை உணர்ந்து பார்த்தால் தெரியும்.

அதேபோல, படிக்கிற வயதிலேயே மகன் அல்லது மகளை கடன்காரர்களாக்குவதா என்று கல்விக் கடன் பெறுவதைத் தவிர்ப்பதும் சரியல்ல. கல்வியானது ஒரு தலைமுறையின் தலையெழுத்தையே மாற்றிவிடுகிறது என்கிறபோது, தயங்காமல் கல்விக் கடன் பெற்று, விரும்பிய உயர்படிப்பைப் படிக்கலாம்.

இப்படி வாழ்க்கையில் முன்னேற்றத் திசை நோக்கிப் பயணிக்க உதவும் கடன்களை வாங்கத் தயங்கக் கூடாது என்கிறபோது, கார் கடன், ஆடம்பரப் பொருட்களைத் தவணை முறையில் வாங்குவது போன்றவற்றை ஒரு முறைக்கு இருமுறை  பரிசீலனை செய்து இறங்குவது அவசியம்.

கடன் என்கிற சமாச்சாரத்தை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துவதும், புதைகுழி போல அதற்குள் கண்ணை மூடிக்கொண்டு விழுவதும் நம் கையில்தான் இருக்கிறது

0 comments:

கருத்துரையிடுக

+