சென்டிரல் ரெயில் நிலையத்தில் குழந்தையை கடத்திய பெண்ணை கண்டுபிடிப்பதில் புதிய சிக்கல்

சென்னை,
கண்காணிப்பு கேமரா காட்சிகள் தெளிவாக இல்லாததால், சென்டிரல் ரெயில் நிலையத்தில் குழந்தையை கடத்திய பெண்ணை கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
குழந்தை கடத்தல்சென்னை கொளத்தூர், லட்சுமிபுரத்தை சேர்ந்த ராஜா (வயது 29), மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் பழனி முருகன் கோவிலுக்கு செல்வதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் வந்தார். ஆனால் ரெயில் சென்றுவிட்டதால் அவர்கள் ரெயில் நிலையத்திலேயே படுத்து தூங்கினர். அப்போது அவர்களது 5 மாத குழந்தை யாழினியை மர்ம பெண் ஒருவர் தூக்கிச் சென்றுவிட்டார்.
இதுதொடர்பாக சென்டிரல் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தையை கடத்திச்சென்ற பெண்ணின் உருவம் ரெயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அந்த கடத்தல்காரியை பிடிப்பதற்கு 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
தெளிவாக இல்லைதனிப்படை போலீசார் பழைய குற்றவாளிகள், குழந்தை கடத்தல் வழக்கில் ஏற்கனவே பிடிப்பட்ட பெண்கள் என பல்வேறு தரப்பினரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் குழந்தையை கடத்திச் சென்றது யார்? என்பது குறித்து எந்த துப்பும் கிடைக்கவில்லை.
சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பழுதாகியிருந்ததால் கடத்தல்காரியின் முகம் தெளிவாக பதிவாகவில்லை. ரெயில் நிலையத்தில் பிற இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலமே குழந்தையை தூக்கிச்சென்ற பெண் அடையாளம் காணப்பட்டார். ஆனாலும் அவளது முகம் தெளிவாக இல்லை.
திருவான்மியூரில் யாழினி?திருவான்மியூர் பகுதியில் யாழினி தோற்றத்தில் ஒரு குழந்தை இருப்பதாக திருவான்மியூர் போலீசார் நேற்று ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ரெயில்வே போலீசார், ராஜாவுடன் அங்கு சென்று பார்த்தபோது அது யாழினி இல்லை என தெரிந்தது.
ரெயில்வே போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘கண்காணிப்பு கேமராவில் பதிவான சுடிதார் அணிந்த அந்த பெண்ணுக்கு சுமார் 30 வயது இருக்கும். அந்த பெண்ணின் உருவத்தை தெளிவான புகைப்படமாக மாற்ற ஸ்டூடியோவிற்கு அனுப்பியுள்ளோம். அந்த புகைப்படம் வந்த பின்னர் அதனை மற்ற போலீஸ் நிலையங்களுக்கு அனுப்புவோம். 2 நாட்களில் குற்றவாளியை அடையாளம் காண்போம்’’ என்றார்.

0 comments:

கருத்துரையிடுக

+