புழுதிவாக்கத்தில் வீடு இடிந்து ஒருவர் பலி: 3 பேர் படுகாயம்!

Posted Date : 14:28 (05/04/2014)Last updated : 15:09 (05/04/2014)
சென்னை: புழுதிவாக்கத்தில் திடீரென வீடு இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியாக 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை புறநகர் பகுதியான புழுதிவாக்கத்தில் பாரதிநகர் பிரதான வீதியில், புழுதிவாக்கம் பஸ் நிலையத்துக்கு அருகே உள்ள ஜெயபால் என்பவருக்கு சொந்தமான வீடு நேற்று இரவு திடீரென இடிந்து விழுந்தது. அந்த வீட்டின் தரைத்தளத்தில் சந்திரா என்கிற ஹோட்டலும், முதலாவது மாடியில் ஒரு குடும்பமும் வாடகைக்கு இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு அந்த வீடு இடிந்து விழுந்தபோது ஹோட்டலில் நான்கு மேற்குவங்க இளைஞர்களில் மூவர் சாப்பிட்டுவிட்டு வெளியேற, 22 வயதான மன்சூம் ஷேக் என்பவர் மட்டும் கைக்கழுவிக் கொண்டிருந்திருக்கிறார். மன்சூம் ஷேக் மீது வீடு இடிந்து விழுந்ததும், இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்ட அவர் ஹோட்டலைவிட்டு வெளியே சென்ற தனது நண்பர்களை தனது செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தனை காப்பாற்ற கூறியிருக்கிறார். அப்போது மீண்டும் கட்டிடம் கீழே அமுங்கியதால், மன்சூம் ஷேக் நள்ளிரவு 1 மணியளவில் சடலமாக மீட்க்கப்பட்டார்.
அதேநேரம், முதலாவது மாடியில் குடியிருந்த சிவகுமாரின் மனைவி தீபா, 3வது படிக்கும் மகள் மணிஷா, ஒரு வயது குழந்தை கீர்த்தனா மற்றும் அவர்களது உறவுக்காரப் பெண்ணான விமலா ஆகியோர் வீட்டில் இருந்து அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து விமலா கூறுகையில், ''அப்போது நான் வீட்டை பெருக்கி கொண்டிருந்தேன். சின்ன சத்தத்துடன் வீடு அசைவதை உணர்ந்து கத்திக் கொண்டே நானும் மனிஷாவும் வெளியே ஓடி வந்தோம். உண்மையில் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டு விட்டதாகதான் நினைத்தேன். பாப்பாவை கட்டிப் பிடித்துக் கொண்டு தீபா உள்ளே சிக்கி கதறியழுது கொண்டிருந்தார். அக்கம்பக்கத்தினர் உடனடியாக வந்து இருவரையும் பத்திரமாக மீட்டுவிட்டனர்" என்றார் பதற்றத்துடன்.

இந்த சம்பவ பற்றிய தகவல் அறிந்து உடனே வந்த மடிப்பாக்கம் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தி, படங்கள்: செ.கிரிசாந்

0 comments:

கருத்துரையிடுக

+